சென்னை மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 245.46 கோடி ரூபாய் செலவிலான தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் மற்றும் 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ' "எல்லோருக்கும் எல்லாம்" எனும் திராவிட மாடல் ஆட்சி அனைத்து துறை, அனைத்து சமூகம், அனைத்து மாவட்ட வளர்ச்சியை உள்ளடக்கி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தொழில்துறை மிகச் சிறப்பாக வளர்ச்சிபெற துறையின் அமைச்சர்கள், செயலர்கள் காரணமாக இருக்கின்றனர். நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு நம்மை தயார் செய்து அந்த இலக்கை எட்டுவோம் . தொழிற்சாலைகளை ஸ்மார்ட் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும். தமிழ்நாடு, 295 மில்லியன் அமெரிக்க டாலர் அளவு என இந்தியளவில் 2ஆவது பொருளாதார மாநிலமாகத் திகழ்கிறது. தெற்காசியாவின் தலைசிறந்த இடத்தையும் பெற்றுள்ளது.
2030ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியை அடைய செய்வதற்கான பாதையில் செல்கிறோம். சூரிய எரிசக்தி, மின்னணுவியல், மின் வாகனம், வான்வெளிப் பாதுகாப்பு , கூட்டு உற்பத்தி முப்பரிமாண வடிவமைப்பு, அச்சிடுதல், ரோபோடிக்ஸ் துறைகள் புதிய தொழில்வாய்ப்பு உள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளன.
குறு, சிறு தொழில்துறையையும் அதிநவீன முறையில் மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து துறைகள் வளர்ச்சிபெற கூட்டு முயற்சியாக தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை மூலம் தொழில் பயிற்சி மையங்கள், தொழில் நுட்ப மையமாக மாற்ற 2,777 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "ஓபிஎஸ் பொது மன்னிப்பு கேட்டார்”... ”அதிமுகவில் இரட்டை தலைமை பதவிகள் காலாவதி” - சி.வி சண்முகம் பரபரப்பு பேட்டி