சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற பிறகு அவர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து, நாளை மாலை பிரதமர் மோடியை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்காக பிரதமர் சென்னை வந்ததற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழகத்திற்கான, கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கிறார்.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், 17ம் தேதி இரவு 8.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
இதையும் படிங்க: கிராமங்களில் கோயில் திருவிழாவிற்குப்போலீசாரின் அனுமதி அவசியமில்லை..