சென்னை: கொச்சின் ஹவுஸ் வளாகத்தில் 186 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,036 காவலர் குடியிருப்புகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) திறந்து வைத்தார். அதேபோல் உள்துறை சார்பில் 36 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் 32 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 2 காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் மற்றும் 1 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கான பாசறை, 55 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் " உங்கள் சொந்த இல்லம் " திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் போன்றவற்றை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள புதுப்பேட்டைக்குச் சென்று, புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் 100 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: QR code மூலம் அபராதம் வசூலிக்கும் முறை - தொடங்கிவைத்த சென்னை காவல் ஆணையர்!