இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கடைப்பிடிக்கத் தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையைக் கொண்டுவந்துள்ளது. விழிப்புணர்வை உருவாக்க பரப்புரை அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் நடவடிக்கையில், இதுவரை அரசு 47.31 லட்சம் பேருக்குப் போடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 2 லட்சம் தடுப்பூசிகள் போடும் பணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கோரிக்கை
தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவதைத் துரிதப்படுத்தி அதிகரித்து வருவதால், குறைந்தபட்சம் பத்து நாட்கள் தடுப்பூசி போடப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடுபவர்களுக்கு கூறப்பட்டுள்ள தேதியில் தடையின்றிப் தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி மையங்களில் பற்றாக்குறை இல்லாமல் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ரெம்டெசிவிர் கிடைப்பதை உறுதிப்படுத்துக
ரெம்டெசிவிர் உற்பத்தி செய்யப்படும் மாநிலத்திற்குள் மட்டுமே ரெம்டெசிவிர் விற்பனை முன்னுரிமை அளிக்கப்படுவது நடக்கிறது. இந்த செயல் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கட்டான இந்தக் கட்டத்தில், ரெம்டெசிவிர் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய தனிப்பட்ட மாநிலங்களின் எந்தவொரு தடை உத்தரவும் போடுவது தடை செய்யப்பட வேண்டும். நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு முன்னுரிமை தராமல், தேவைப்படுபவர்களுக்கு மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
செங்கல்பட்டில் செயல்படத் தயாராகும் தடுப்பூசி வளாகம்
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு நகரில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அதை கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் தேசிய அளவில் தடுப்பூசி பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. தற்போது செயல்படத் தயாராகவும், அனுமதிக்காகவும் காத்திருக்கிறது.
இந்த வளாகத்தைச் செயல்படுத்துதற்குத் தடையாக ஏதேனும் நிலுவைப் பணிகள் இருந்தால், அதை விரைந்து முடிப்பதற்கான சாத்தியத்தைக் காண வேண்டும். கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க இந்த வளாகத்தை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.