சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்த அறிக்கையில், தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில், ஜூன் 1, 2022 முதல் ஜூலை 2022 வரை 664.9 மி.மீ. மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது இம்மாவட்டத்திற்கான இயல்பான மழை அளவை விட 125 விழுக்காடு கூடுதல் ஆகும்.
மேலும் கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை முதல் அதி கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குடிசைகள் வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன, ஒரு சில பகுதிகளில் சிறிய அளவில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில், 22 குடும்பங்களைச் சார்ந்த 102 நபர்கள், 5 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்தவும், வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், இதர உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்கவும் உள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 160 வீரர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பது மரபு - கே.எஸ் அழகிரி