சென்னை: புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இன்று (19.01.2023) சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்டு, புத்தக விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து, கருணை அடிப்படையில் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. இப்பதிப்பகப் பிரிவின் மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுநர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு, மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள இந்து சமயம் சார்ந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்களை ஸ்டாலின் வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்களை புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்து அச்சிட்டு வெளியிடுவதுடன், 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டுள்ள சுமார் 61,600 சுருணை ஓலைகளும், 10 செப்புப் பட்டயங்களும், 20 பிற ஓலைச்சுவடிகளை பராமரித்துப் பாதுகாத்து, எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மறுபதிப்பு செய்து வெளியிடப்படும் அரிய புத்தகங்கள் ஆணையர் அலுவலக புத்தக விற்பனை நிலையம் மற்றும் 48 முதுநிலைத் திருக்கோயில்களின் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும்.
இதையும் படிங்க: "காவல் நிலையத்திற்குச் சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும்"