சென்னை : அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(மே.31) இரவு 10 மணியளவில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் ஜப்பான் ஆகிய நாடுகளில் 9 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டதில் சுமார் ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இந்த மாநாட்டில் உலக முதலீட்டாளர்களை பங்கேற்க வைத்து, புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 9 நாட்கள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது கடந்த 24ஆம் தேதி சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியான சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பை தொடர்ந்து அந்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன். என் பயண அனுபவங்களைச் சிறு டைரி குறிப்பு போல் உங்களுடன் பகிர்கிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க : எல்லா கல்லூரிக்கும் ஒரே நாளில் தேர்வு - அமைச்சர் பொன்முடி புதுத் திட்டம்!