சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி மதுரையில் துவங்கப்பட்டது.
இந்நிலையில் சுமார் 1,14,000 குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அதில், வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30,122 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதால், அனைவருக்கும் தரமான உணவு வழங்குவது குறித்து ஆலோசனையும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.
மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, கூட்டுறவுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் பங்கேற்றனர்.