நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அதேபோன்று திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 224 கோடியே 91 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 15 துணை மின் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.
மொத்தம் 235 கோடியே 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தொழில் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த புதிய டைட்டல் தகவல் தொழில்நுட்பப் பூங்காவானது 10 ஏக்கர் நிலப்பரப்பில், 5.57 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில், 21 அடுக்குமாடி கட்டடமாக அமையவுள்ளது.
இப்பூங்கா நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாயப் பூங்கா என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன. தென்சென்னையில் டைடல் பூங்கா உருவாக்கிய வளர்ச்சியைப் போலவே, சென்னையின் வடக்குப் பகுதியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக இத்திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைச் சுற்றி பல தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்குவித்து, சுமார் 25,000 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இத்திட்டம் 24 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
பின்னர், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமியின் நினைவுத் தூணையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன உறுப்பினர்களின் நலனிற்காக 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மூலம் திரைப்படத் தொழிலாளர்களுக்கு 6,000 குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது முதல்கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் முன்னதாக அறிவித்தபடி முதல்கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது இரண்டாம் கட்டமாக, ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் இன்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.
இதையும் படிங்க: சென்னையில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா!