பொதுஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது, பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்துவது, ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேர பொதுஊரடங்கினை அறிவிப்பது உள்ளிட்டவைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் சென்று கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
நோய்த் தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டு வார காலத்திற்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தொழிற்சாலைகள், உணவகங்கள், தொழில் கூடங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடக்கூடிய வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி