பழம்பெரும் நடிகை எம்.என். ராஜமின் கணவரும், பின்னணிப் பாடகருமான ஏ.எல். ராகவன் ராமச்சந்திரா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதற்கிடையே, இன்று (ஜூன் 19) காலை ராகவன் மாரடைப்பால் காலமானார்.
இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'தமிழ்நாட்டு மக்களை தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், பிரபல குணச்சித்திர நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்களின் அன்பு கணவருமான ஏ.எல். ராகவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று(ஜூன் 19) இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
ஏ.எல்.ராகவன், 1950-களிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் அனைத்து உணர்வுகளையும் சூழ்நிலைக்கேற்ப வெளிப்படுத்தி பாடக்கூடியவர். ஏ.எல். ராகவன் பாடிய 'எங்கிருந்தாலும் வாழ்க', 'சீட்டுக் கட்டு ராஜா', 'என்ன வேகம் நில்லு மாமா' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இவர் திரைப்பட விருதுகள் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.எல். ராகவன் மறைவு தமிழ்த் திரைப்படத்துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.