சென்னையில் மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் கோயம்பேட்டில் 486 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தலைமை செயலாளர் சண்முகம் பேசும்போது, ' கோயம்பேட்டில் 45 எம்.எல்.டி கழிவு நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம், மக்கள் தொகை 10 ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும். எனவே இது போன்ற மறுசுழற்சி மையங்களை உருவாக்கி நீரை தூய்மைப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்' என்றார்.
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, 'சென்னை மாநகராட்சியை சுற்றி உள்ள தொழிற்சாலைகளுக்கு சுத்திகரித்து நீரை வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். சிப்காட் தொழிற்சாலைகள் மற்றும் ஹுண்டாய் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கும் பட்சத்தில்107 கோடி வருமானம் அரசிற்கு கிடைக்கும்' என்றார்.
துனை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, 'முதல் முதலாவதாக மீஞ்சூரில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நன்னீரை குறைக்க தான் இந்த திட்டம் மிக முக்கியமாக கொண்டு வரப்பட்டது' என்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்மி பேசும்போது, சென்னை மாநகராட்சியில் தரை தளம், இரண்டாம் தளம் வரை உள்ள கட்டிடங்களுக்கு 45674567 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அழைத்தால், அல்லது இணையதளம் மூலம் பதிவு செய்தால் எந்தவித ஆவணமும் இன்றி கழிவுநீர் இணைப்பு உடனடியாக வழங்கப்படும். இத்திட்டம் 2019 டிசம்பர் 2 முதல் நடைமுறைக்கு வரும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வருகைக்காக காத்திருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம்..!