முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, அவர்களது விடுதலையில் தமிழ்நாடு அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், ஆளுநர் அதுகுறித்து முடிவெடுக்காமல் தாமதித்து வருகிறார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இறுதியாக தெரிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
7 பேர் விடுதலை தொடர்பாக வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள், முதலமைச்சரிடம் வலியுறுத்துவோம் என தெரிவித்திருந்த நிலையில், ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.