நடைபெற்றுவரும் தமிழ்நாடு மானிய பட்ஜெட் கூட்டத்தொடரில், சட்டப்பேரவை விதி 110இன் கீழ் சிறு, குறு தொழில்களுக்கான புதிய திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில்,
- சென்னையில் 350 கோடி ரூபாய் செலவில் புத்தகங்கள் மற்றும் அறிவுசார் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆதரித்து, உள்கட்டமைப்பு சேவைகள் மற்றும் வணிகச் சூழலுடன் கூடிய ஒரு புத்தொழில் மற்றும் புத்தாக்க நகரம் அமைக்கப்படும்.
- தமிழ்நாடு அரசின் பங்களிப்புடன் தனியார் தொழிற் பூங்கா உருவாக்கும் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டம், கல்லப்பாளையம் கிராமத்தில் 116.24 ஏக்கர் பரப்பளவில், 20 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பில், கொடிசியா மூலம் ஒரு புதிய தனியார் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இத்திட்டத்திற்கு அரசின் மானியமாக 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.
- தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019இன் அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாட்டில் மின்சார வாகன உபகரணங்கள் உற்பத்தி செய்யும் மற்றும் மின்சாரம் ஏற்றும் கட்டமைப்புக்கு தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்ய தொடங்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை, 25 சதவீதம் சிறப்பு மூலதன மானியமும், அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை, தகுதி வாய்ந்த இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 20 சதவீதம் வரை, கூடுதல் சிறப்பு மூலதன மானியமும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 110-விதியின் கீழ் விவசாயிகளுக்காக முதலமைச்சர் அறிவிப்புகள்