கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த மூன்று வாரங்களுக்கு அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வும், ஐந்து தனி நீதிபதிகள் கொண்ட அமர்வும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும், மக்கள் தேவைகளின்றி நீதிமன்றத்திற்கு வரக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் உயர் நீதிமன்றத்தில் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றனவா என்பதை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, குற்ற வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்ற அறைகளில் அதிகளவு மக்கள் கூட்டமிருப்பதால், பெரிய அறையில் வழக்கு விசாரணையை மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை எனில் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படாமல் விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி புதிய வழக்குகளை தாக்கல் செய்யும் போது, சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் அனுமதி பெற்றபின் வழக்குப்பதிவு செய்ய வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: பிணையில் வெளிவந்த 136 கைதிகள்