சென்னை திருவொற்றியூர் கார்கில் நகரில், தமிழ்நாடு குடிசை வாரிய குடியிருப்பில் வசிக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சூமணி ஓரான் மகன் ஜியான் ஓரான் (35). இவரின் மேற்கு வங்க நண்பர்களான ரூபேஷ் (26), பப்லு, லைத்து, ஓரான் ஆகியோர் அப்பகுதியிலே தங்கி கார்பெண்டர் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 27) இவர்கள் அனைவரும் எண்ணூர் ராமகிருஷ்ணன் நகரில் உள்ள கடற்கரை பகுதிக்குச் சென்றனர். அப்போது பப்லு, ஜியோன் ஓரான் ஆகியோர் மட்டும் கரையில் அமர்ந்திருக்க, லைத்து ஓரான், ரூபேஷ் ஆகியோர் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.
கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் அவர்கள் இருவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். இதில் லைத்து ஓரான் மட்டும் அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியால் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், ரூபேஷ் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் (ஆகஸ்ட் 28) உயிரிழந்த நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை புள்ளி சுறா