சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் மாதத்தில் சற்று தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், பரவலாக மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
இந்த வடகிழக்கு பருவமழையால் தற்போது சென்னை மாநகரம், ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகள் போல சில்லென்று மாறியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகும். அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறையிலும் இன்று 26 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பதிவான வெப்பநிலை: சென்னை 26 டிகிரி செல்சியஸ், கோவை 31.1 டிகிரி செல்சியஸ், கன்னியாகுமரி 32.6 டிகிரி செல்சியஸ், ஊட்டி 18.9 டிகிரி செல்சியஸ், கொடைக்கானல் 16.9 டிகிரி செல்சியஸ், வால்பாறை 26 டிகிரி செல்சியஸ், குன்னுர் 19.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகி உள்ளது. இதில், அதிகபட்சமாகக் கன்னியாகுமரியில் 32.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.
சில்லென்ற மாறிய சென்னை: சென்னை பொருத்தவரை, இந்த பருவத்தில் 30.5 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால், 5.5 டிகிரி செல்சியஸ் குறைந்து 26 டிகிரி செல்ஸியாக இருந்து வருகிறது. இதனால், சென்னை மாநகரமே குளிர்ந்துள்ளது.
குறிப்பாகக் காற்றின் ஈரப்பதம் 91% சதவீதமாக இருப்பதால், சென்னையின் தற்போதைய வானிலை, ஒருவித இதமான வானிலையாக இருந்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக, சென்னையில் மாலை 4.30 மணிக்கே இருள் சூழ ஆரம்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மகழிச்சி: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருக்கிறது. மேலும் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தினால் சென்னையே இதமான வானிலையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அவர்களது சமூக வலைத்தள பக்கங்களில், சில்லென்று மாறியுள்ள சென்னையின் வானிலை குறித்து பதிவுகளை அதிக அளவு பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நவ.19 வரை மழை தான்.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அப்டேட்!