சென்னை: இயல்பை விட இந்த அக்டோபர் மாதத்திற்கான மழை அளவு குறைவாக பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “வடகிழக்கு பருவமழை பொருத்த வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில், இந்த அக்டோபர் மாதத்திறான மழை அளவானது, 98.மீ.மீ ஆகும். இயல்பான மழைப்பதிவு 171 மீ.மீ இருக்க வேண்டும்.
ஆனால், இம்முறை இயல்பை விட 43% மழை அளவு குறைவாக தான் பதிவாகி உள்ளது. கடந்த 123-ஆண்டுகளில், 9-ஆவது முறையாக அக்டோபர் மாதத்தில், மழை குறைவாக பதிவாகி உள்ளது. அக்டோபர் மாதத்தை பொருத்தவரையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறையாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவாகவும் பதிவாகி உள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வடகிழக்கு பருவமழையானது தற்போது வழுபெற்று இருக்கவில்லை. தற்போதைய நிலையில், மேகங்கள் கிழக்கில் இருந்து மேற்கை நோக்கி பயணப்பதால் தான், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது.மேலும் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம் எதுவும் இல்லாமல் இருப்பதால், மழையானது விட்டு விட்டு தான் பெய்யும்.
காற்று வேகம் குறைவாக இருப்பதால், மழை முடிந்த பிறகு மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதம் காரணத்தினால், காற்று தூசுகள், வாகன புகைகள் காற்றில் கலந்து, நமக்கு மாலை நேரத்தில் பணி மூட்டம் போல் தெரிகிறது. வடகிழக்கு பருவ மழையானது அக்டோபர் மாதத்தில், பெரும்பாலான தினத்தில், காற்றி திசையானது கிழக்கை நோக்கி நகர்ந்து வருகிறது.
மேலும், இயல்பை விட காற்றின் வேகமும் குறைந்து வருகிறது. வங்கக் கடலில் காற்றின் ஈரப்பதம் குறைந்து இருப்பதால், தற்போது காற்று மேகம் மட்டும் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் அன்றே வங்கக் கடலில் ஒரு புயல், அரபிக்கடலில் ஒரு புயல் என இரண்டு புயல் உருவாகியது.
இதனால், காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. கிழக்கு திசை காற்றும் வேகமாக இல்லை. கடந்த 16 ஆண்டுகளில் எல்லினோவும், ஐஓடியும் சேர்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதில் 9 ஆண்டுகள் நல்ல மழையும், 5 ஆண்டுகள் இயல்பை விட அதிகாமவும், 2 ஆண்டுகள் இயல்பை விட குறைவான மழையும் பதிவாகி உள்ளது. வானிலையை பொருத்தவரை, மாறுதல் ஆகி கொண்டு இருக்கும்.
நவம்பர் மாதத்தில் மழை: நவம்பர் மாதத்திற்கான வானிலை அறிக்கையை, டெல்லியில் இருந்து இன்று (அக்.31) மாலை இந்திய வானிலை மைய தலைமையகம் கொடுக்கும். அதில், நவம்பர் மாதற்கான மழை எப்படி இருக்கும் என்று தெரியும். மேலும், அக்டோபர் மாதத்தை வைத்து நாம் நவம்பர் மாத மழை குறைவாக தான் இருக்கும் என்று கூற முடியாது. கடந்த காலங்களில், அக்டோபர் மாத்தில் மழை குறைவாகவும், நவம்பர் மாதத்தில் அதிகமாகவும் பெய்து உள்ளது. சில சமயங்களில் நவம்பர மாதத்தில் குறைவாக கூட மழை அளவு இருந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டி-ஷர்டாக மாறும் பிளாஸ்டிக் பாட்டில்கள்.. சாதனை படைத்த திருப்பூர் ஆடை தயாரிப்பு நிறுவனம்..