மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில், சென்னையில் உள்ள தண்ணீர் பிரச்னையைப் போக்கி தன்னிறைவு பெறுவது தொடர்பான கருத்தரங்கம், நந்தனத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் இயக்குநர் பிரபு சங்கர் ஐஏஎஸ், மெட்ராஸ் ஐஐடி பேராசிரியர் பாலாஜி நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரபு சங்கர் ஐஏஎஸ், ”கடந்த முறை சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, கல்குவாரிகளில் உள்ள குளங்களிலிருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் மொத்தத் தேவையில், வெறும் 1 விழுக்காட்டை மட்டுமே நிறைவு செய்தது. அவ்வேளையில், நீர் நிலைகளே பெரிய அளவுக்கு உதவின.
தண்ணீர் லாரிகள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் சிறிய லாரிகள், சின்ன யானை வண்டிகள் மூலம் நீர் எடுத்துச்செல்லப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டுதான் குடிநீர் கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் மிகக் குறைவு. வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சென்னை மாநகராட்சிப் பகுதியில் அனைத்துவகை கழிவுநீரும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.
தண்ணீர் வீணாவது முற்றிலுமாக தடுத்துநிறுத்தப்படும். சென்னையில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு, நீர் வழிப்பாதைகளில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய, பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், ”சென்னை நகரம் பெருமளவு மழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதோடு, பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: பாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் கடல் நடுவே புதிய ரயில் பாலம் - பணிகள் தொடக்கம்
!