சென்னை: வில்லிவாக்கத்தில் வழக்கறிஞரை ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வில்லிவாக்கம் மேட்டுத் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி ரம்யா, மக்கள் ஆளும் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். ராஜேஷ் வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி பாம் சோமுவின் மைத்துனர் ஆவார். பாம் சோமு மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், நேற்று இரவு 8:30 மணியளவில் ராஜேஷ் வில்லிவாக்கம் எம்டிஎச் சாலையில் உள்ள மோகன் ரெட்டி மருத்துவமனை வாயிலில் நாற்காலியில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஏழு பேர் கொண்ட கும்பல் ராஜேஷை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது.
![வழக்கறிஞர் ராஜேஷ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-murdercctv-script-7202290_05102020151557_0510f_1601891157_772.jpg)
இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வில்லிவாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா? அல்லது வேறு சில காரணங்களால் நடந்ததா? என்ற கோணத்தில் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ராஜேஷ் 2015 ஆண்டு எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
இதனிடையே, ராஜேஷை கொலை செய்வது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிசிடிவியில் முதலில் இரண்டு இளைஞர்கள் திடீரென அங்கு வந்து அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் ராஜேஷை வெட்டியுள்ளனர். பின்னர் இதனைத் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், ராஜேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்வது போன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க:மகன் கொலை செய்ய முயற்சிப்பதாக பெற்றோர் புகார் - வைரலாகும் காணொலி!