சென்னைப் பல்கலை துணைவேந்தரை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட தேடுதல் குழுவிற்கு ஜேஎன்யூ துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமனம் செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஜெகதீஷ் குமார் நியமனத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு தமிழகத்தை சேராத ஒருவரை துணைவேந்தராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும், சென்னை பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே ஆர்எஸ்எஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஜெகதீஷ் குமாரை தேடுதல் குழுவிற்கு தலைவராக ஆளுநர் நியமித்திருக்கிறார் என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
தேர்ந்த கல்வியாளர்கள் பலர் தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவரை தேடுதல் குழு தலைவராக நியமிக்காமல், டெல்லியை சேர்ந்த ஒருவரை எதற்காக நியமிக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகதீஷ் குமார் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ஜேஎன்யூவில் ஆர்எஸ்எஸ் ஆதரவு மாணவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டவர் என மாணவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள், ஜேஎன்யூ துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.