சென்னை, ஆவடி ட்ரைவர்ஸ் காலனியில் வசித்துவருபவர்கள் ராதிசியம்-ராக்கி தம்பதி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. இந்தத் தம்பதி மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய தூரத்து உறவு எனக் கூறி சன்னி என்பவர் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார்.
அப்போது, ராதிசியம்-ராக்கி தம்பதி தங்களது வீட்டிலேயே தங்கி வேலை தேடுமாறு கூறியுள்ளனர். இதனால், சன்னி கடந்த 15 நாள்களுக்கு மேல் அவர்களது வீட்டிலேயே தங்கி வேலை தேடிவந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் சன்னி, தம்பதியின் இரண்டு வயது ஆதிசேன் என்ற குழந்தையை மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறிக் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் குழந்தையும், சன்னியும் காணவில்லை. இதன் காரணமாக தம்பதி, குழந்தையைத் தேடிவந்தனர். பின்னர் சன்னி செல்போன் மூலம் தம்பதிக்குத் தொடர்புகொண்டு, 'குழந்தை என்னுடன் இருக்கிறான், ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் குழந்தையைக் கொடுப்பேன்' என்று மிரட்டியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தம்பதி உடனடியாக ஆவடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து சன்னியின் செல்போன் சிக்னலை வைத்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் குழந்தையை மீட்டுச் சன்னியை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க:குழந்தை சந்தேக மரணம் - பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்!