கரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக் கவசம் அணியவேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முகக் கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மே 22 ஆம்தேதி முதல் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் முகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகளைப் பிடித்து வழக்குப்பதிவு செய்து தலா ரூ. 500 அபராதம் விதித்து வருகின்றனர். தற்போதுவரை முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது 44 ஆயிரத்து 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அmதன் மூலம் இதுவரை 2 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதைப்போல தனிமனித இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவும் போடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டிருந்தது. அதனை மீறி இருசக்கர வாகனங்களில் இரண்டு பேர் செல்கிறார்கள். இதனால் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக இதனை போக்குவரத்து காவல்துறை செயல்படுத்தி வருகின்றது.
![chennai traffic police fined 2 crores on till date for not wearing mask](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-10-fine-script-7202290_05062020235728_0506f_1591381648_972.jpg)
தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் ஒருவருக்கு மேல் இருசக்கர வாகனங்களில் சென்றதாக இதுவரை 2 ஆயிரத்து 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடமிருந்து ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம் வசூலித்துள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதேபோல் ஆட்டோவில் இரண்டு பேருக்கு மேல் சென்றதாகக் கூறி 526 வழக்குகள் பதிவு செய்து 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயும், காரில் இரண்டு பேருக்கும் அதிகமாக சென்றதாக 176 வழக்குகள் பதிவு செய்து 88 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளதாகவும் மொத்தம் 46 ஆயிரத்து 879 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 கோடியே 34 லட்சத்து 39 ஆயிரத்து 500 ரூபாயை போக்குவரத்து காவல்துறையினர் வசூல் செய்துள்ளனர்.
குறிப்பாக சென்னையில் நேற்று (மே 5) ஒரே நாளில் மொத்தமாக 2 ஆயிரத்து 442 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 12 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அபராத தொகை வசூல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: வீரமரணமடைந்த ராணுவ வீரருக்கு ஸ்டாலின் இரங்கல்