சென்னை: சென்னையிலிருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் விமானச் சேவை, இன்று(டிச.12) முதல் தொடங்குகிறது. ஏற்கனவே வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த இந்த விமானங்கள் தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படுகின்றன.
இந்தியாவிலிருந்து இலங்கை கொழும்பு விமான நிலையத்திற்கு மட்டுமே விமானச் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜாப்னா எனப்படும் யாழ்ப்பாணத்திலும் விமான நிலையம் உள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் நிலையத்திற்கு விமான சேவைகள் இல்லாத நிலை இருந்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்குத் தமிழ்நாட்டிலிருந்து விமானச் சேவையை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன.
இதை அடுத்து ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானச் சேவையைத் தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய ரக ஏடிஆர் விமானங்களை இயக்கி வந்தது.
கரோனா காலத்தில் தடைசெய்யப்பட்ட விமானச் சேவை:இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு பரவியது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் ஊரடங்குகளையும் அமுல்படுத்தின. இதை அடுத்து சென்னை யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் தற்போது, கரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு ஓய்ந்து, சகஜ நிலை திரும்பி உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டு இருந்த, வெளிநாட்டு விமான சேவைகளை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை மட்டும் இதுவரை தொடங்காமலிருந்து வந்தது.
இதையடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த விமானச் சேவைகள் இன்றிலிருந்து மீண்டும் தொடங்குகிறது. ஏற்கனவே விமான சேவைகளை இயக்கி வந்த அலையன்ஸ் ஏர் நிறுவனம், சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவைகளைத் தொடங்கியுள்ளன.
வாரத்தில் 4 நாட்கள் சேவை:ஏற்கனவே வாரத்தில் 3 நாட்கள் மட்டும், யாழ்ப்பாணத்திற்கு ஓடிக்கொண்டிருந்த விமான சேவைகள் தற்போது, வாரத்தில் 4 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் இந்த விமான சேவைகள் நடக்கும். காலை 9:25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம், காலை 10:50 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடைகிறது. மீண்டும் காலை 11:50 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு பகல் 1:15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வருகிறது.
சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். அதோடு இலங்கையில் அதிகமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கும், இந்த விமான சேவைகள் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் ஏர் நிறுவனம், 64 சீட்டுகள் உடைய, ஏ டி ஆர் எனப்படும் சிறிய ரக விமானத்தை இயக்கியது. முதல் நாள் என்பதால் பயணிகளுக்கு விரிவான அறிவிப்பும் இல்லாததால், இன்று மிகவும் குறைவான பயணிகளாக 12 பயணிகள் மட்டுமே சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்தனர். இன்று முதல் நாளில் விமானம் காலதாமதமாக காலை 10. 15 மணிக்கு யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க:தமிழை உலகெங்கும் கொண்டு செல்ல பிறமொழி கற்றல் அவசியம்: தமிழிசை சவுந்தரராஜன்