சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (டிச.31) அதிகாலை 2:15 மணிக்கு பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸ் செல்ல இருந்த ஏர் பிரான்ஸ் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 276 பயணிகள் பயணம் செய்ய வந்திருந்தனர்.
மேலும், பயணிகள் அனைவரும் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாகவே சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காகத் தயாராக இருந்தனர். ஏர் பிரான்ஸ் விமானமானது, வழக்கமாக நள்ளிரவு 12:15 மணிக்கு பாரிஸில் இருந்து சென்னை வந்து, மீண்டும் பாரிஸ் புறப்பட்டுச் செல்லும்.
அதேபோல், இந்த விமானம் குறித்த நேரத்தில் சென்னைக்கு வந்த நிலையில், விமானத்தில் ஏறுவதற்குத் தயாராக இருந்த 276 பயணிகளும், விமானத்தில் ஏறி அமர்ந்தனர். மேலும், விமானப் பணிப்பெண்கள், பொறியாளர்கள், விமானிகள் உட்பட 14 பேரும் விமானத்தில் ஏறியதை அடுத்து, விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு 290 பேருடன் விமானம் புறப்படத் தயாரானது.
இந்த நிலையில், விமானத்தை இயக்குவதற்கு முன்னதாக விமானிகள் விமானத்தின் இயந்திரங்களைச் சரி பார்த்தபோது, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இருந்ததைக் கண்டறிந்தனர். இதனையடுத்து, விமானத்தை இயக்கினால் பெரும் ஆபத்து என்று கருதி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து, விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவித்துவிட்டு, விமானப் பொறியாளர்கள் விமானத்துக்குள் ஏறி, விமானத்தின் இயந்திரங்களைப் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், உடனடியாக விமானத்தின் இயந்திரங்களை சரி செய்ய முடியவில்லை. இதனால், விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், பயணிகள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தற்போது தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த விமானம் நாளை (2024, ஜன.1) அதிகாலை சென்னையில் இருந்து பாரிஸ் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பாரிஸ் செல்ல வேண்டிய 276 பயணிகளும் தற்போது சென்னையில் தவித்து வருகின்றனர். ஏனெனில், இவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் நாடுகளுக்கு புறப்பட்டு செல்ல இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்டுள்ள திடீர் இயந்திரக் கோளாறு காரணமாகப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தங்கள் நாட்டிற்குச் செல்ல முடியாமல், சென்னையில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதற்கிடையே, இந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை விமானிகள் தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கையால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 290 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2024 புத்தாண்டை வரவேற்க ரெடியாகும் தமிழ்நாடு மக்கள்..! போலீசார் பாதுகாப்பு தீவிரம்..