சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுகாதாரத்தை பேணும் வகையில், சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி பொது இடங்களில் குப்பைக்கழிவுகள், கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பொது இடங்களில் குப்பைக் கொட்டிய நபர்களிடம் இருந்து ரூ.9.23 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமானக் கழிவுகளை வீசிய நபர்களுக்கு ரூ.7.68 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு கட்டடம் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டிய 427 நபர்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில், பொது இடங்களில் குப்பைக்கழிவுகள் கொட்டியதாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 2 கிளிகளால் ரூ.2.5 லட்சம் ஃபைன் கட்டிய ரோபோ சங்கர்.. முழு விபரம்