சென்னை: தரமணி திருவள்ளுவர் நகர்ப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்.
மழை நீரால் சூழ்ந்துள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு உணவு வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா கூறியதாவது, 'இரண்டு நாட்கள் மழைக்கே சென்னை கடல் போல் மாறியுள்ள்ளது. மழைக்காலங்கள் மிகவும் கடினமானதாக இருக்கிறது.
அதற்கு ஒரு தீர்வு வேண்டுமென மக்கள் கேட்கத்தொடங்கியுள்ளனர்.
நான் ஏற்கெனவே கூறியது போல், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் இரண்டாயிரம் போதாது. ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும். டெல்டா பகுதி விவசாயிகளை இந்த அரசாங்கம் காக்க வேண்டும்.
தற்போதைய மழை இயற்கைப் பேரிடராக இருந்தாலும், இதனால் ஆண்டுதோறும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ராட்சத வடிகால் வசதிகளை அமைத்து, ஹாங்காங் போல் சென்னையை மாற்ற வேண்டும்.
சமாதிகள், மேம்பாலங்கள், நினைவிடங்கள் கட்டுவதை விடுத்து சென்னையில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பிற்கு அடுத்த மழை காலத்திற்குள் நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டும்.
ஒரு அரசியல் கட்சியாக பொதுமக்களுக்கு நாங்கள் உணவு அளிக்கலாம். ஆளும் கட்சியும் அதையே செய்யக் கூடாது. இதை நான் குறையாக கூறவில்லை. ஆனால், இந்நேரத்தில் அரசாங்கம் வேகமாக செயல்பட வேண்டும்.
பல இடங்களில் மின்சாரம் கிடைக்கவில்லை. மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டை திமுக, அதிமுக ஆட்சி செய்துள்ளது. தற்போதைய முதலமைச்சராக உள்ள ஸ்டாலின், முன்பு சென்னையின் மேயராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
ஆனாலும், ஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர, மக்களின் காட்சிகள் மாறவில்லை. காட்சிகளும் மாற வேண்டும். சிங்கப்பூரைப் போல் சென்னையை மாற்ற வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: போராட்ட களத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்த பிரேமலதா