சென்னை: சென்னையில் உள்ள மிகப்பழமையான பூங்காக்களில் ஒன்று ஷெனாய் நகரில் அமைந்துள்ள திரு.வி.க பூங்கா. அந்தக் கால மெட்ராஸின் சாட்சியாக இருக்கும் இடங்களில் ஷெனாய் நகர் திரு.வி.க பூங்காவுக்கு மிக முக்கிய இடமுண்டு. 8.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பூங்கா மெட்ரோ ரயில் மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக 2011ம் ஆண்டில் மூடப்பட்டது.
இப்பூங்காவில் 328 மரங்கள் இருந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதி உதவியுடன் புதுப்பொலிவுடன் பொழுதுபோக்கு பூங்காவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பூங்காவில் 18 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து பல்வேறு சிறப்பு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு படிப்பகம், சறுக்கு பயிற்சி, குழந்தைகள் பூங்கா, திறந்தவெளி திரையரங்கு, மட்டைப்பந்து பயிற்சிக் கூடம், நடைப்பயிற்சி பாதை, செயற்கை நீரூற்று, இரவு நேரத்தில் பல வண்ண செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், யோகா மற்றும் தியானப் பயிற்சி கூடம் ஆண், பெண் என இருவருக்கும் தனித்தனியாகக் கூடைப்பந்து, பூப்பந்து, கடற்கரை கைப்பந்து மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்கா வளாகத்தில் உள்ள 4.3 லட்சம் சதுர அடி பகுதியில் 2.1 லட்சம் சதுர அடியில் கடைகளும், 1.7 லட்சம் சதுர அடியில் பார்க்கிங் வசதிகளும் அமைக்கப்படுகின்றன. இதில் பார்க்கிங்கில் 404 கார்கள் மற்றும் 893 பைக்குகளை நிறுத்த முடியும். முன்னதாக ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக அதன் மேல் பகுதியில் உள்ள திரு.வி.க பூங்காவை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பூங்காவை செவ்வாய்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததோடு பேட்டரி காரில் சென்று பூங்காவை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது விழாவின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சிறிய வயதில் துள்ளி குதித்து விளையாடிய பூங்கா புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் பூங்காவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் எனவும் மாநகராட்சிக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை நகரில் முக்கியமான பூங்காக்களில் ஒன்றாக கருதப்படும் அண்ணா நகர் டவர் பூங்கா 12 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.