சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 1ஆம் தேதி வரையில் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2ஆம் தேதி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட குறிப்பில், “சென்னை மாவட்டத்தின் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், ஆதிதிராவிட நல, சென்னைப் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் அரையாண்டுத் தேர்வு நடைபெற்றது.
இந்தப் பள்ளிகளில் வருட நாட்காட்டியின்படி, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிவுற்று, 2024 ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஜனவரி 4ஆம் தேதி சென்னை மாவட்டத்தின் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு தொடங்க உள்ளது. எனவே, அந்தத் தேர்விற்கு மாணவர்கள் தயராகும் வகையில் வகுப்பு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர். அதேபோல், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை இதே நாட்களில் விடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என தனியார் பள்ளி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதேபோல், விடுமுறைக்குப் பின்னர் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், இதனை அனைத்து தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பொன்முடி சந்திப்பு! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?