சென்னை அயனாவரத்தில் கடந்த 21ஆம் தேதி ரவுடி சங்கர், காவலரை வெட்டி தப்பிக்க முயன்றபோது காவல் துறையினரின் என்கவுன்டரில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் ஐந்தாவது நீதிமன்ற நீதித்துறை நடுவர் சிவசக்திவேல் கண்ணன் விசாரணை நடத்தினார்.
நீதித்துறை நடுவர் சிவசக்திவேல் கண்ணன் மருத்துவமனைக்கு வந்து இறந்த ரவுடி சங்கரின் தாயார் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகாவிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது காவல் ஆய்வாளர் நடராஜன் மீது நீதித்துறை நடுவரிடம் அவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து நீதித்துறை நடுவர் சிவசக்திவேல் கண்ணன் என்கவுன்டர் நடந்த நியூஆவடி சாலைக்குச் சென்று ஆய்வுசெய்தார். அந்த இடத்தில் மூன்று கிலோ கஞ்சா, அரிவாள் பறிமுதல்செய்யப்பட்டன.
மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ரவுடி சங்கரின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அது காணொலியாகவும் பதிவுசெய்யப்பட்டது.
உடற்கூறாய்வு முடிந்த பிறகு ரவுடி சங்கரின் உடலை வாங்க உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. ஏற்கனவே சங்கரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும்வரை உடலை வாங்கமாட்டோம் என்று அவரது சகோதரி ரேணுகா தெரிவித்திருந்தார்.
அதன்படி, உடற்கூறாய்வு முடிந்தும்கூட உடலை வாங்க யாரும் வரவில்லை. இதனால் மூன்று நாள்களாக உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல் ஆய்வாளர் நடராஜன் முன்விரோதம் காரணமாகவே ரவுடி சங்கரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விதிகளின்படி, சுட்டுக் கொன்ற காவல் துறையினரே வழக்கை விசாரிக்க முடியாது என்பதால் சிபிசிஐடியிடம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் ரவுடி சங்கரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: காவல் ஆணையர் அகர்வால் விளக்கம்!