சென்னை: வடகிழக்கு பருவ மழையால் சென்னையில் இயல்பைவிட 77 சதவீதம் மழை அதிகமாகப் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழை பெய்யக்கூடும்.
அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்” என்று கூறினார்
15 இடங்களில் மிக கனமழை
மேலும், நாளை (நவ.28) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் 15 இடங்களில் மிக கனமழையும் 35 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
இதையும் படிங்க : Chennai Rain - பாத் டப்பை படகாக மாற்றிய மன்சூர் அலிகான்