சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் கூறுகையில்,“சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் தொலை மருத்துவம் எனப்படும் இணையவழி மருத்துவ சேவை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த சேவையை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், முதியோர் நல மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகிய துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்குவதாகவும், இச்சேவைகளை பெறுவதற்கு https://teleconsultation.s10safecare.com என்ற இணைப்பில் தொடர்பு காெள்ளலாம் எனத் தெரிவித்தார்.
மேலும், பொது மருத்துவம் - திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 முதல் 10 மணி வரையிலும், பொது அறுவை சிகிச்சை மருத்துவம் - திங்கள் முதல் வியாழன் வரை காலை 10 முதல் 11 மணி வரையிலும், குழந்தை நல மருத்துவம் - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் 11 மணி வரையிலும், முதியோர் நோய் மருத்துவம் - புதன் முதல் சனிக்கிழமை வரை காலை 10 முதல் 11 மணி வரையிலும், மகப்பேறு மருத்துவம் - செவ்வாய், வியாழன், சனிக்கிழமை மட்டும் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், தோல் நாேய் மருத்துவம் - திங்கள், புதன், வெள்ளி மட்டும் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் மருத்துவ ஆலோசனை பெறலாம் எனவும், வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்பவர்களும் ஆலோசனை பெறலாம் எனவும், இதற்காக மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்திற்கு மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்
இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், சர்வதேச நோய்த்துறையின் இணை பேராசிரியருமான மது கூறுகையில், “சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு விரும்புபவர்கள் அதற்கான இணைப்பை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும் எனவும், அதன் பின்னர் நாங்கள் தரும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் உள்ளே செல்லலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். சில தாய்மார்கள் குழந்தைகள் சரியாக உண்பதில்லை எனவும், சிலர் குழந்தைகளின் மனநிலை குறித்தும் கேட்டனர். மேலும், இந்த திட்டத்தில் ஆலோசனை மட்டுமே வழங்கப்படுகிறது. மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை எனவும், வரும் காலத்தில் விரிவுப்படுத்தினால் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டப் பணியாளர்கள் மூலம் பரிசோதனை செய்து மருந்து அளிக்கவும் திட்டம் உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க:சென்னையில் சிக்கிய கள்ளநோட்டு கும்பல்..! இப்படித்தான் இருக்கும் கள்ள நோட்டு.. பொதுமக்களே உஷார்..