சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முகலிவாக்கம், சபரி நகர் மற்றும் மதனந்தபுரம் பகுதிகளில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 99.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்தப் பணிகளின் மூலம் 39ஆயிரம் நபர்கள் பயனடைவார்கள். அப்போது, பருவமழைக்கு முன்னதாக பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், பணிகள் முடிக்க முடிக்க அந்தப் பகுதிகளில் தரமான சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் உடனுக்குடன் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, லலிதா நகர் 2ஆவது தெருவில் பெருநகர மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் வடிகால் பணிகளை 15 நாட்களுக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார். மேலும், நீர் வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போரூர் ஏரியில் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள நடைபாதை அமைத்தல், கரைகளை பலப்படுத்துதல், ஏரியினை பசுமையாகப் பராமரிக்கும் வகையில் மரங்கள், செடிகள் நடுதல் போன்ற அழகுப்படுத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகளையும்
போரூரில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தில் தன்னார்வ அமைப்பு மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கும் பணிகளையும், சமையல் கூடத்தினைப் பார்வையிட்டும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்குள்ள குழந்தைகளால் பராமரிக்கப்படும் மாடித் தோட்டத்தினைப் பார்வையிட்டு குழந்தைகளைப் பாராட்டினார். குழந்தைகளுடன் பேசும்போது, கல்விதான் மிகவும் முக்கியம் என்று கூறி, நன்கு படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். காப்பகத்தினை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ராமாபுரம், திருவள்ளூர் சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் 2960 மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவற்றில் 1706 மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஆயிரத்து 254 மீ. நீளமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்விடத்தில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால், நெடுஞ்சாலைத் துறையுடன் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியமும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பணிகள் முடிக்க முடிக்க அந்த பகுதிகளில் தரமான சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் உடனுக்குடன் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க :நீண்ட நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி சந்திப்பு - நடந்தது என்ன?