சென்னை: துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கிக்கொள்ளாமல் செல்லவும், துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்களால் போக்குவரத்து சிக்கல் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை மேம்பாலம் அமைக்க 2009 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் இதற்கான பணிகள் துவங்கி பாலத்திற்கான தூண்களும் அமைக்கப்பட்டன.
பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த திட்டம் எப்போது முடிவடையும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. மேம்பாலம் அமைக்கும் பணிகள் மெதுவாக நடைபெற்று வந்த காரணத்தால் திட்டத்திற்கான மதிப்பீடும் உயர்ந்து கொண்டே வந்தது இந்நிலையில் மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையேயான ஈரடுக்கு மேம்பாலத்திற்காக சென்னை கோயம்பேடு முதல் துறைமுகம் வரை அமைக்கப்பட்டுள்ள பழைய தூண்கள் வலுவிழந்த காரணத்தால் அவற்றை இடிக்க திட்டமிட்டுள்ளதாக துரைமுக ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து துறைமுக அலுவலகத்தில் நேற்று சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பலிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2022-23 நிதி ஆண்டில் சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் இருந்து 92 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த நிதி ஆண்டில் 150.26 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 13 வருடத்தில் இல்லாத அளவிற்கு 150 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் அடைந்துள்ளோம் என தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் 38,000 வாகனங்கள் சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகி உள்ளது. சென்னை துறைமுகத்திலிருந்து சுண்ணாம்பு கற்கள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் சிறிதளவு ஏற்றுமதியில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக எண்ணெய் இறக்குமதியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உலகமே மாற்று எரிசக்தியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. தற்போது நிலக்கரி ஏற்றுமதி என்பது கப்பல் துறையில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஏற்றுமதியில் சரக்கு கையாளுவதில் நிலக்கரிக்கு மாற்றாக ஆட்டோமொபைல், காற்றாலை உதிரி பாகங்கள் மற்றும் லித்தியம் பேட்டரி உள்ளிட்ட பொருள்களுக்கு வருங்காலங்களில் முக்கியத்துவம் வழங்கப்படும்.
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகத்திலிருந்து வருகின்ற 2023-24 ஆம் ஆண்டுக்கான 100 மில்லியன் சரக்கை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.6,076 கோடி மதிப்பீட்டில் அமையுள்ள மதுரவாயல் - சென்னை துறைமுகம் ஈராடுக்கு உயர்மட்ட சாலைக்கான ஒப்பந்த புள்ளிகள் ஏப்ரல் 6-ம் தேதி திருத்தப்படுகிறது. ஈரடுக்கு உயர் மேம்பாலத்திற்காக சென்னை கோயம்பேடு - துறைமுகம் இடையே ஏற்கனவே அமைக்கப்பட்ட தூண்கள், உறுதித் தன்மை அற்றதாக இருக்கும் காரணமாக அகற்றப்படும்” எனத் தெரிவித்தார்.