சென்னை: சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடைபெறுவதை தடுப்பதற்காக மத்திய குற்றப் பிரிவில் உள்ள விபச்சார தடுப்பு பிரிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆன்லைனில் பாலியல் தொழில் செய்யும் நபர்களை கண்காணித்து, அவர்கள் மீது தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஆன்லைனில் பாலியல் தொழில் தொடர்பான விளம்பரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சென்னை வடபழனி கனகப்பா தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஏழு பெண்களைக் கொண்டு பாலியல் தொழில் நடைபெறுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.
குடியிருப்புகள் அதிகம் இருக்கும் பகுதியில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் போல் தரகர்களை நடிக்க வைத்து, பாலியல் தொழில் விடுதி நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த கணைதாஸ் என்பவரும் சென்னையில் தரகர்களாக செயல்பட்டு பாலியல் தொழிலை தொடர்ந்து நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது ஏற்கனவே பாலியல் தொழில் செய்ததற்காக விருகம்பாக்கத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
குறிப்பாக வீட்டு வேலைக்கும், அழகு நிலையங்களுக்கும் ஆள் தேவை எனவும்; பல்வேறு விதமாக விளம்பரம் செய்து வேலை தேடி வரும் பெண்களை ஆசை வார்த்தை காட்டி, வறுமையை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் அம்பலமானது.
குறிப்பாக லோகாண்டோ என்ற இணையதளத்தின் மூலம் விளம்பரம் செய்து ஆன்லைன் பாலியல் தொழிலை நடத்தியதும் தெரியவந்துள்ளது. முக்கிய தரகரான வெஸ்லி என்பவர், கோவாவில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலமாகவே சென்னையில் சொகுசு வீடுகளை குத்தகைக்கு எடுத்து விடுதியாக மாற்றி பாலியல் தொழிலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து லோகாண்டோ ஆப் மூலம் பாலியல் தொழில் தரகர்கள் அடுத்தடுத்து சிக்குவதால், ஆன்லைனில் பாலியல் தொழில் செய்ய உதவும், இந்த ஆப் மற்றும் இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை களம் இறங்கியுள்ளது.
இந்த இணையதளம் மற்றும் ஆப் மூலம் நடைபெறும் இந்த சட்ட விரோத பாலியல் தொழில் தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளின் விவரங்களை வைத்து அறிக்கை ஒன்று தயாரித்து மத்திய அரசிடம் லோகாண்டோ இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, ஆன்லைன் பாலியல் தொழில் மட்டுமல்லாது, சைபர் கிரைமும், இந்த இணையதளம் மூலம் அதிகரிப்பதாகவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இணையதளத்தில் பெண்கள் அழைப்பது போல் விளம்பரத்தை மேற்கொண்டு பணம் செலுத்த வைத்து, குறிப்பிட்ட இடத்தில் உல்லாசமாக இருக்க வரவழைத்து ஆண்களை ஏமாற்றும் நூதன வகை மோசடியும் நடைபெற்று வருவதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக மசாஜ் சென்டர்கள் நடத்துவதற்கும் பயன்படும் லோகாண்டோ இணையதளத்தையும் மற்றும் இதர இணையதளங்களையும் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சைபர் கண்காணிப்பு குழு ஆன்லைன் விபச்சாரம் குறித்து ஆய்வு செய்து அது தொடர்பான விளம்பரங்களை விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட தரகர்களை கைது செய்யவும் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்கும் நடவடிக்கையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஆன்லைன் பாலியல் தொழிலில் கூடாரமாக மாறும் லோகாண்டோ இணையதளம் தொடர்பாக
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் அறிக்கை அனுப்பி லோகாண்டோ ஆப் மற்றும் இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் நிலநடுக்கம் வருமா,வராதா? - கட்டுமானப் பொறியாளர் சங்கத்தினர் தந்த அதிர்ச்சித் தகவல்!