சென்னையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவோர் மற்றும் பைக் சாகச பந்தயத்தில் ஈடுபடுவோரை காவல் துறையினர் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முக்கிய சாலைகளான மெரினா காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பல சாலைகளில் இரவு நேரங்களில் வாகன தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் காவல் துறையினரின் தடையை மீறி 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்றிரவு (மார்ச் 19) மெரினா காமராஜர் சாலையில் இருசக்கர வாகன சாகச பந்தயத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் சாலைகளில் வீலிங் செய்து கொண்டும், அதிவேகமாக வாகனத்தை இயக்கியும் பந்தயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும், தலைமை செயலகத்தில் பட்ஜெட் கூட்டம் நடைபெறுவதால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செல்லும் முக்கிய சாலையான காமராஜர் சாலையில் இரவு நேரத்தில் ஒரு காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சட்டவிரோதமாக இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வீடியோவில் பதிவான அடையாளங்களை வைத்து தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு - கணவனை கொலை செய்த மனைவி கைது