சென்னை: தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கி டெபாசிட் ஏடிஎம் இயந்திரங்களை குறிவைத்து, நவீன முறையில் ரூ. 1 கோடிவரை கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சவுகத் அலி, அமீர் அர்ஷ், வீரேந்தர், நஜீப் ஹுசைன் ஆகியோரை ஹரியானா சென்று கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வரப்பட்ட கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தோர் சிறையிலடைக்கப்பட்டனர். இதில் சவுகத் அலி, கொள்ளைக் கும்பலில் ஒரு குழுவின் தலைவனாக செயல்பட்டது தெரிய வந்தது.
சென்னையில் முதல் கொள்ளை சம்பவம்
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சவுகத் அலி, அவனது கூட்டாளிகளே, சென்னையில் முதல் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இவர்கள் விமானம் மூலமாக சென்னை வந்து, சென்ட்ரல் அருகே அறை எடுத்து தங்கியுள்ளனர்.
பின்னர் பெரியமேடு ஏடிஎம் இயந்திரத்தில் தங்கள் முதல் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். பின்னர் கடந்த 15 முதல் 18ஆம் தேதிவரை ரூ. 16 லட்சம்வரை கொள்ளை அடித்துள்ளனர்.
திட்டமிட்டு அரங்கேற்றிய கொள்ளை
திட்டம் சரியாக நிறைவேறியவுடன், பிறருக்கும் தகவல் கொடுத்து சென்னை வர செய்துள்ளனர். பின்னர் கூகுள் மூலமாக எங்கெங்கு டெபாசிட் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன என ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் கொள்ளை அடிக்க இரவு நேரத்தை தேர்ந்தெடுத்து, இருசக்கர வாகனத்தை பயன்படுத்தியுள்ளனர்.
கொள்ளைக் கும்பல் தலைவனுக்கு 7 நாட்கள் காவல்
கொள்ளையடிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கி டெபாசிட் ஏடிஎம்கள், ஓகேஐ எனும் குறிப்பிட்ட ஜப்பான் நிறுவனம் தயாரித்த இயந்திரங்கள் ஆகும்.
இந்நிலையில் கொள்ளைக் கும்பல் தலைவன் சவுகத் அலியை, 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 6) அனுமதி வழங்கியது.
நூதன முறையில் கொள்ளையடிக்க கற்றுக் கொடுத்தது யார்?
அவனிடம் நூதன முறையில் கொள்ளையடிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுத் தந்தது யார்? என தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இந்தி மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் வங்கி ஊழியர்கள், ஓகேஐ நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு கொள்ளையில் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. மேலும் சென்னையில் கொள்ளை நடைபெற்ற இடங்கள், ஹரியானா ஆகிய இடங்களுக்கும் நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஏடிஎம் கொள்ளையிலும் தொடர்பு
இந்த நிலையில் புதுச்சேரி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கும், சவுகத் அலிக்கும் தொடர்புள்ளதா என புதுச்சேரி கிருமாம்பாக்கம் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான காவலர்கள், நேற்று சென்னை வந்து விசாரணை நடத்தினர்.
சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பின்னர், இரு கொள்ளையர்களுக்கும் தொடர்பில்லை என உறுதி செய்த புதுச்சேரி காவலர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: காவலாளி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குக - உயர் நீதிமன்ற மதுரை கிளை