மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜானி - ரந்தோஷ் போஸ்லே தம்பதிக்கு எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் இவர்கள் வசிக்கும் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அவர், தங்கள் குழந்தை அழகாக உள்ளது எனவும், சினிமா படப்பிடிப்பில் குழந்தையை நடிக்க வைப்பதாக மகாராஷ்டிரா தம்பதியிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ரந்தோஷ், குழந்தையை நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் குழந்தைக்கு தோல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றுக்கூறி ரந்தோஷ், அவரது மாமியார், குழந்தை ஆகியோரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து அங்கு சென்று குழந்தைக்கு ஆடை மாற்ற வேண்டும் எனவும் தோல் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறிய அந்த பெண், ரந்து அவரது மாமியாரை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு குழந்தையுடன் மாயமானார். பின்னர், நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் ரந்தோஷ் போஸ்லே புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மருத்துவனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த பெண்ணை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்க: குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்தவர் கைது!