சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1,000 ரூபாய், மது போதையில் வாகனத்தை இயக்கினால் 10 ஆயிரம், அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஹாரன் பயன்படுத்தினால் ரூபாய் 1000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் 2,500 அபராதம் என புதிய நடைமுறையை கொண்டு வந்தது.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்தந்த மாநில அரசு முடிவு எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் இதுவரை அந்த சட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு மட்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி 10,000 அபராதம் விதிக்கப்பட்டு அவை நீதிமன்றம் மூலமாக பெறப்பட்டு வந்தன.
மற்றபடி மீதமுள்ள அபராத தொகையைப் பழைய படியே போக்குவரத்து காவல்துறையினர் பெற்று வந்தனர். இந்நிலையில் அனைத்து விதமான போக்குவரத்து விதிமீறலுக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தத் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை கடிதத்தைச் சென்னை காவல்துறை அனுப்பி இருப்பதாகச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி 10 மடங்கு அதிகமாக அபராதம் வசூலிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்படாமல் அமல்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு 200கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.