தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்ட பின்னர் சென்னையில் பொதுமக்கள் பலர் வாகனங்களிலும், சாலைகளில் வெளியே செல்ல தொடங்கியுள்ளனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் பலர் இருசக்கர வாகனங்களில் தனி மனித இடைவெளியைப் பின்பற்றாமலும் முகக்கவசம் அணியாமலும் செல்கின்றனர்.
ஏற்கெனவே சென்னை மாநகராட்சி ஆணையர், முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றும் நபர்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், சாலைகளில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று முதல் முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் பயணிக்கும் நபர்களிடமிருந்து 179 மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சென்னை போக்குவரத்து போலீசார் ரூ. 500 அபராதத்தை வசூலித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரித்தும் இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் சென்றதாகக் கூறி 2,130 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 500 ரூபாய் வீதம் 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக வசூலித்து உள்ளனர். மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.