சென்னை: மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 11.20 மணியளவில் தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று (ஜூலை 24) காலை 11 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக தகவல் தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். உடனே கட்டுப்பாட்டு அறை காவலர்கள் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சிஎம்பிடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சிஎம்பிடி போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் சென்று சிஎம்பிடி பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். ஒரு மணிநேரம் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணைக் கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் 11.20 மணிக்கு போன் செய்து 11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக கூறியதால் போலீசார் குழப்பமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபோதையில் போலீசாரை தாக்கிய குதிரை ஓட்டுநர் கைது: இந்த நிலையில், மதுபோதையில் சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கிய குதிரை ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் தீபக் (27). இவர் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று தீபக் தனது நண்பருடன் மெரினா கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரைக்கு வந்துள்ளார்.
அப்போது மதுபோதையில் இருந்த காவலர் மற்றும் அவரது நண்பர் குதிரை ஓட்டுபவரான கிஷோரிடம் வீண் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த கிஷோர் குதிரை ஏறும் இரும்பால் காவலரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த காவலரை அருகில் இருந்தோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ஆறு தையல் போட்டு காவலர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீசார் கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, பெரம்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த குதிரை ஓட்டுபவரான கிஷோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குதிரை ஓட்டுநர் கிஷோரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மேஜிஸ்திரேட் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்து விடுவித்தார். மேலும், எழும்பூர் இரண்டாவது நீதிமன்றத்தில் கிஷோர் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் கூடுதலாக உள்நாட்டு முனையம் அமைக்க நடவடிக்கை!