சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவதூறாகப் பேசியதாக சென்னை காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில், அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் அணுகிட தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது. இதற்கான பரிந்துரைக் கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல்துறை இன்று (ஜன.14) அனுப்பியுள்ளது.
கடந்த ஜன.9 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரை மீது பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு கொடுத்த உரையில், ஆளுநர் சில பகுதிகளை தவிர்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினர் உள்ளிட்ட பல தரப்பினரும் ஆங்காங்கே ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திமுக சார்பில் சென்னை விருகம்பாக்கம் 128-வது வட்டத்தில் நடந்த, 'பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா' பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழ்நாடு ஆளுநர் குறித்து அருவருக்கத்தக்க வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதனைத்தொடர்ந்து, ஆளுநரின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தபால் மற்றும் மின்னஞ்சல் மூலமாக புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகார் மனுவில், 'மாநிலத்தின் சட்டத்தின் தலைவர் ஆளுநர், அவர் மீது திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அருவருக்கத்தக்க வகையில் பேசி, கொலை மிரட்டல் விடும் தொனியில்’ பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 (IPC) பிரிவின் கீழ், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த சட்டப்பிரிவானது நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றுபவர்களை அவர்களின் கடமையை செய்யவிடாமல் தடுத்தல், அவர் மீது அவதூறு பரப்புதல், மிரட்டல் விடுதல் என்கிற வகையில் குற்றமாகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த புகாரைப் பெற்றுக்கொண்ட சென்னை காவல்துறையினர், சட்ட வல்லுநர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில், ஆளுநரைக் குறித்து அவதூறாக பேசியிருப்பதால் சென்னை காவல்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்க முகாந்திரம் கிடையாது எனவும்; அவதூறு வழக்கை அரசு வழக்கறிஞர் மூலமாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடருமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
பொதுவாக முதலமைச்சர், ஆளுநர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யமுடியாது எனவும்; நீதிமன்றத்தில் அரசு மூலமாக வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஆளுநரின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி மட்டுமில்லாமல், தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆளுநர் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் கடிதம்: குடியரசுத் தலைவர் பதில் என்ன?