சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி அந்தஸ்தில் உள்ள அலுவலர் மீது சிபிசிஐடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வந்த அந்த பெண் எஸ்பியை தடுத்து மிரட்டியதாக மாவட்ட எஸ்பி ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. தற்போது, விசாகா கமிட்டி தலைவர், உறுப்பினரை மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை காவல்துறையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டியில், இதற்கு முன்பு காவல்துறை இணை ஆணையராக இருந்த மகேஸ்வரி தலைவராகவும், உறுப்பினராக கூடுதல் துணை ஆணையர் குமாரும் இருந்து வந்தனர். இந்நிலையில், இந்த 2 அலுவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் புதிய தலைவராக, சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியும், உறுப்பினராக நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் சுவாமிநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விசாகா கமிட்டியில் உறுப்பினர்களாக காவல்துறை நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வரும் தெய்வநாயகி, சமூக செயற்பாட்டாளர் வித்யா ரெட்டி ஆகியோர் ஏற்கனவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் விவகாரம்: நேர்மையான விசாரணை நடத்துமா விசாகா கமிட்டி?