சென்னை: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி கிருஷ்ணாராவ் என்பவர், ஆந்திர மாநிலம் குண்டூர் துர்க்கி கிராமத்தைச் சேர்ந்த சுப்பாராவ் (48) மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் ரூ.60 லட்சம் பணத்தை கொடுத்து, சென்னையில் உள்ள தங்க நகை வியாபாரியிடம் கொடுத்து தங்க நகைகளை வாங்கி வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பேரில், சுப்பாராவ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ரூ.60 இலட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி இரவு ஆந்திராவிலிருந்து சொகுசு பேருந்தில், சென்னைக்கு கிளம்பி மறுநாள் 13-ஆம் தேதி காலை மாதவரம் பேருந்து நிலையம் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து, சென்னையில் உள்ள தங்கநகை கடைக்காரர் அனுப்பிய காரில் ஏறி, கொருக்குப்பேட்டை பழைய கிளாஸ் பேக்டரி தெரு ஓஸ்வால் அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள பெரிய பாளையத்தம்மன் கோயில் அருகில் நின்றிருந்துள்ளனர்.
அப்போது தெலுங்கானா மாநில பதிவெண் கொண்ட ஒரு காரில் வந்த 2 நபர்கள் சுப்பாராவ் மற்றும் அவரது மனைவியை கொலை செய்துவிடுவதாக மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ.60 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து சுப்பாராவ், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த ஆர்.கே நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ் (24), ரமேஷ்பத்தினி (32) மதுபத்தினி (29) புன்னாராவ் (35) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.20,81,500 பணம் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கார் (Hyundal Aura) ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்த நால்வரை போலீசார் விசாரித்த போது புன்னாராவ் என்பவர், சுப்பாராவை, ஆந்திர மாநில தங்கநகை வியாபாரி கிருஷ்ணாராவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளதும், அதன்பேரில், சுப்பாராவ் பணத்துடன் சென்னை செல்வதை அறிந்து அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சென்னைக்கு பணத்துடன் வந்த சுப்பாராவ் மற்றும் அவரது மனைவியிடம் இருந்து ரூ.60 லட்சம் பணத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
மேலும் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 நபர்களும், விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: இளைஞரை திருமணம் செய்து பணம் பறிப்பு - இளம்பெண் உள்ளிட்ட 3 பேர் கைது!