சென்னை : புறநகர் பகுதிகளில் திருட்டு, கொள்ளை, கூட்டுக் கொள்ளை,வழிப்பறி, கொடுங்குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாள்களில் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான தனிப்படையினர் 2 ஆயிரத்து 283 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் 1,689 பேரும், ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்ட 491 நபர்களும்,சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 17 பேரும் வழிப்பறி கொள்ளையர்கள் 37 பேரும் அடங்குவர்.
மேலும் 13 குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் இருந்து வந்த 8 குற்றவாளிகள் நீதிமன்ற பிடி ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில குற்றவாளிகள் மீது சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.
107 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை திருட்டு, கொள்ளை, கூட்டுக் கொள்ளை, வழிப்பறி மற்றும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட 107 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மறுவாழ்வு வேண்டி பெண் மாவோயிஸ்ட் தமிழ்நாடு காவல் துறையினரிடம் சரண்!