சென்னை: வீடுகளில் பேப்பர் போடும் வேலை செய்த குணசீலன் என்பவர், தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் 13 வயது மகளை, பெற்றோருக்குத் தெரியாமல், ஷாப்பிங் மால், தியேட்டர் என சிறுமியை அழைத்து சென்று நட்பாகப் பழகி செல்போனில் ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்த சிறுமி வீட்டின் குளியல் அறையில் உயிரை மாய்த்துக்கொண்டார். 2020ல் நடந்த சம்பவம் குறித்து, போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தரமணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குணசீலன் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்து வந்தது. காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், குணசீலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து அந்த தொகையை சிறுமியின் பெற்றோருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், குற்றவாளியின் அசையும், அசையா சொத்துக்கள் வாயிலாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கவும். கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பல் பிடுங்கிய விவகாரம்:2ஆம் கட்ட விசாரணையில் மூன்று பேர் ஆஜர்