தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நிவர் புயலாக உருமாறி இன்று (நவ. 25) மாலை முதல் நள்ளிரவில் சென்னையை ஒட்டி கரையைக் கடக்கும் சூழ்நிலை உருவானதால் சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.
வடசென்னை பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொருக்குப்பேட்டை கே.எம்.எஸ். டிப்போ மீனாம்பாள் நகர் ஜே.ஜே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே தண்ணீர் தேங்கிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதேபோன்று திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையில் நடந்துசெல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் முன்பே மழை அதிகமாக பெய்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். மேலும், புயல் கரையைக் கடக்கும் நேரங்களில் காற்றின் வேகம், மழை வெள்ளம் எவ்வாறு இருக்குமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: நிவர் புயல்: 12 மாவட்டத்தில் குடிமைப்பொருள்கள் இருப்பு!