கரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவியதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குள்பட்ட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து முழு ஊரடங்கினை அமல்படுத்துமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் சுமார் 270க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் காவல் துறையினர் சோதனைச்சாவடிகள் அமைத்து மக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
சென்னையில் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராசர் சாலை உள்ளிட்ட அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளைத் திறந்திருப்பவர்கள் அரசு அனுமதித்த நேரத்திற்குள் கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் வீடுகளின் அருகில் உள்ள இரண்டு கிலோ மீட்டருக்குள் சென்று தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் முன்னதாகவே எச்சரித்துள்ளனர். இதையடுத்து இன்று காலை முதல் சென்னை நகர் முற்றிலும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இ-பாஸ் உள்ளவர்கள் தவிர வேறு நபர்கள் வெளியில்வர அனுமதிக்கப்படவில்லை. பொருள்கள் வாங்க கார் அல்லது இரு சக்கர வாகனங்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.
இதற்கு முன்னர் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை விட கடுமையான கட்டுப்பாடுகளுடன் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் பலர் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.