சென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார் (25). இவர், மின்சார ரயிலில் பாப்கான் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், பிரசாந்த் குமார் தனது நண்பர்கள் நாகராஜ், ராமன் ஆகியோருடன் நெமிலிச்சேரி ஏரிக்கரை ஓரமாக மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அங்கு வந்து மது அருந்தி உள்ளனர். பின்னர், அவர்கள் பிரசாந்த் குமாரிடம் தங்கள் பகுதியில் வந்து ஏன் மது அருந்துகிறீர்கள் எனக் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், பிரசாந்த் குமார், தனது நண்பர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
அப்போது, அக்கும்பல் இவர்களைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், அக்கும்பல் பிரசாந்த் குமாரை ஓட, ஓட விரட்டி கல்லாலும், பீர் பாட்டிலாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதனைப் பார்த்த நாகராஜ், ராமன் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்தத் தாக்குதலில் பிரசாந்த் குமார் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, தகவலறிந்த பட்டாபிராம் உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்துப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், பிரசாந்த் குமார் கொலை செய்தது, அதே பகுதியைச் சேர்ந்த அஜித் தலைமையினான நண்பர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினர் மூன்று தனிப்படை அமைத்து தலைமறைவாகிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:
ஊரடங்கு எதிரொலி: சேலத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை!