சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(ஏப்.25) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல், வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி பில்லிமலை எஸ்டேட் மற்றும் கோவை சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, நீலகிரி அடார் எஸ்டேட், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, நீலகிரி மாவட்டம் குன்னூர் - சாம்ராஜ் எஸ்டேட் - கோத்தகிரி பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இன்று மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென் கேரளா கடலோரப்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.